×

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 859.5 மி.மீ. மழை பதிவு

கோவை, ஜன. 3: கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 859.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது ஆண்டின் சராசரி மழையளவைவிட கூடுதலாகும். தமிழகத்தில் குளிர்காலம், கோடை காலம் மற்றும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பெய்கிறது. இதில், குளிர்காலம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், கோடை காலத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலும் மழை பெய்யும். இதனை தொடர்ந்து ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கிழக்கு பருவமழையும் பெய்கிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குளிர்காலத்தில் மழை பெய்யவில்லை. பின்னர், கோடை காலத்தில் 8 மழை நாளில் 101.4 மி.மீ. மழை கிடைத்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் 19 மழை நாளில் 308.1 மி.மீ. மழை பதிவானது. மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது டிசம்பர் 31ம் தேதி முடிந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதல் கனமழையாக பெய்தது. குறிப்பாக, மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தொடர் கனமழை இருந்தது. இந்த மழையினால் சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. மேலும், பல வருடங்களுக்கு பின் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து 3 மாதங்கள் தண்ணீர் சென்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை 27 மழை நாளில் மொத்தம் 450 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது சராசரி மழை அளவை விட கூடுதல். மேலும், கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் மழை அளவின் கணக்கீட்டின்படி, ஆண்டின் சராசரி மழையளவு 674 மி.மீ. இந்நிலையில், நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை 859.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவை விட கூடுதலாக 185 மி.மீ. மழை பெய்துள்ளது.

இது குறித்து வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. அதன்படி, 2019ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 859.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெய்துள்ளது. பல வருடங்களுக்கு பின் இது போன்ற காலநிலை அமைந்து அதிகளவிலான மழை பெய்துள்ளது” என்றார்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்