×

மாவட்டம் முழுவதும் ஒரே ஆண்டில் 315 பேர் தற்கொலை: ஆண்கள் தான் அதிகம்

திருவள்ளூர், ஜன. 3: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகளவில்
தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களைவிட, ஆண்கள் அதிகளவில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களை விட, ஆண்கள் தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக பெற்றோரை, அவர்களது பிள்ளைகள் கவனிக்காமல் விட்டு விடுவதால் பல முதியவர்கள் தற்கொலை செய்துகொண்டு தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஜனவரி ஒன்று முதல், டிசம்பர் 31 வரை, மொத்தம் 315 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளனர்.
இதில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் 5 பேர், 15 முதல், 29 வயதுக்கு உட்பட்ட 78 இளைஞர்கள், 52 இளம்பெண்கள் என 130 பேர், 30 முதல், 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 69 ஆண்கள், 53 பெண்கள் என 122 பேர், 45 முதல், 59 வயது உடையவர்களில் 28 ஆண்கள், 18 பெண்கள் என 46 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன் கூறுகையில், ‘‘குடும்ப பிரச்னை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களால், மன அழுத்தம் அதிகமாகி இதுபோன்ற தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஈடுபடாமல் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்’’ என்றார்.

மாவட்ட அரசு மருத்துவமனை தற்கொலை தடுப்பு மையத்தின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘இங்கு மன அழுத்தத்தை குறைக்க மனநல மருத்துவர்கள் உள்ளனர். எனவே தற்கொலையில் ஈடுபட்டு உடலை வருத்திக்கொள்ளாமல் இங்குள்ள தற்கொலை தடுப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற்று மன அழுத்தத்தை குறைத்து செல்லலாம்’’ என்றார்.

Tags : suicides ,district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...