×

லத்தூர் ஒன்றியம் திருவாதூர் கிராமத்தில் அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்

செய்யூர், ஜன.3: செய்யூர் வட்டம் லத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் உள்ள கிராமப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி சுமார் 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதில் இருந்து இங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள விவசாய நிலங்களுக்கு தனியாக மின் இணைப்பு வழங்காததால், டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட பம்ப் செட்டுகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும், டிரான்ஸ்பார்மர் கம்பங்களும் சிதிலமடைந்து காணப்பட்டன.

இதனால், புதிய கம்பங்கள் மாற்றி அமைத்து புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மின் வாரிய துறையினரோ கடந்த சில மாதங்களுக்கு முன் சிதிலமடைந்த கம்பங்களை மாற்றிவிட்டு, டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்து சீரமைத்தனர்.இந்நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த கிராமத்தை சுற்றிலும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் விவசாயம் செய்வதற்காக மின் மோட்டார்களை பயன்படுத்தும்போது டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும், குடியிருப்புகளுக்கு குறைந்த மின் அழுத்த பிரச்னையும் ஏற்படுவதால் குடியிருப்புவாசிகளும், விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

டிரான்ஸ்பார்மரில் புதிய கம்பங்கள் மாற்றும்போது, புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தி இருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டு இருக்காது. மின்வாரிய துறையினரின் அலட்சிய போக்கே இப்பிரச்னைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இப்பிரச்னையில் இருந்து விடுபட அதே பகுதியில் கூடுதலாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுக்க மின் வாரியத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Transformer ,village ,Thiruvadur ,Latur Union ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...