×

முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் கலந்து மாசடைந்து வரும் காட்டரம்பாக்கம் எடையன் குளம்: 10 ஆண்டுகளாக அவலம்

பெரும்புதூர், ஜன.3:  பெரும்புதூர் ஒன்றியம் காட்டரம்பாக்கம் கிராமத்தில் எடையன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, காட்டரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த குளத்தின் நீரை வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தினர்.  மேலும் அதே பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளின் குடிநீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்தது.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த குளத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் இந்த குளம் மாசடைந்து காணப்படுகிறது. தற்போது காட்டரம்பாக்கம் பஜனை கோயில் தெரு, யாதவா தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக இந்த குளத்தில்  கலக்கிறது. இதனால் இந்த குளம் கழிவுநீர் தேக்கி வைக்கும் குட்டையாக மாறியுள்ளது.

மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பையை இந்த குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் இந்த குளத்தை சுற்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்படுத்தும் கூடாரமாக மாறிவிட்டது.இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டரம்பாக்கம் எடையன் குளத்தை முறையாக பராமரிக்காததால், பழுதடைந்து, மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஊராட்சியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் இந்த ஊராட்சிக்கு பல லட்சம் நிதி வருகிறது.

ஆனால், ஊராட்சியில் போதிய நிதி இருந்தும், இந்த குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்வரவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது இந்த குளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

Tags : pond ,Katarampakkam ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...