×

பட்டாளம் மார்க்கெட் அருகே திறந்தவெளி பாராக மாறிய மாநகராட்சி பூங்கா: பொதுமக்கள் கடும் அவதி

பெரம்பூர், ஜன.3: புளியந்தோப்பு பட்டாளம் மார்க்கெட் அருகே உள்ள பூங்காவை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  புளியந்தோப்பு பட்டாளம் மார்க்கெட் அருகே கலைஞர் கருணாநிதி பூங்கா எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. தினமும் இந்த கடைக்கு வரும் குடிமகன்கள் மது வாங்கிக்கொண்டு எதிரே உள்ள மாநகராட்சி பூங்காவை பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் இந்த பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பூங்கா முழுவதும் ஆங்காங்கே காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர் பாக்கெட் கவர்கள் மற்றும் உணவு கழிவுகள் கிடப்பதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும், பூங்காவிற்கும், மதுக்கடைக்கும் இடையே உள்ள தெருவை யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வாகனங்களை நிறுத்தி  அதில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

இதனால்  பட்டாளம் மார்க்கெட் பகுதிக்கு செல்லும் பெண்கள், அம்பேத்கர் கல்லூரி சாலையில் இருந்து புளியந்தோப்பு காவல் நிலையம் வழியாக சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மது போதையில் அரைகுறை ஆடைகளுடன் குடிமகன்கள் அங்கே விழுந்து கிடப்பதால், பெண்கள் அந்த வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர். எனவே குடிமகன்களின் பிடியில் உள்ள அந்த பூங்காவையும், அந்த சாலையையும் மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : park ,space ,Battaramulla Market ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்