×

வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்

சென்னை, ஜன.3: சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் புறநகர் பகுதியான கேளம்பாக்கம் ஊராட்சியில் சாத்தங்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அஜீத் நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர், ரேணுகாம்பாள் நகர், சுசீலா நகர், கனக பரமேஸ்வரன் நகர், எஸ்ஆர்எஸ் நகர், கணபதி நகர்,  நகர் உள்பட 50க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த வீட்டு மனைப்பிரிவுகளுக்கு உட்பட்ட தெருக்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கவில்லை. இதனால் கடந்த 1ம் தேதி புத்தாண்டு அன்று இரவு 7 மணிமுதல் 9 மணிவரை கனமழை பெய்தது. இதில் அந்த தெருக்களில் மழைநீர் சேர்ந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.பின்னர், மழை நின்று விட்ட நிலையில் சாலைகளில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கிவிட்டது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும், கோயில்களுக்கும் சென்றவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் வீடுகளில் இருந்தவர்களும் வெளியே வர முடியாத நிலை உருவானது. குளம்போல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 11 மணியளவில் வீராணம் சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய் அல்லது மழைநீர் வடிகால்வாய் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர்.தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், ஒன்றிய ஆணையாளரிடம், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் செல்போனில் பேசினார். அப்போது, மழைநீர் வடிகால்வாய் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும், நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என ஆணையாளர் உறுதியளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தற்காலிக கால்வாய் அமைக்க கோரிக்கை
சாத்தங்குப்பம் கிராமத்தில் உள்ள மனைப்பிரிவுகளில் முறையான சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் என எதுவும் இல்லை. இதனால் திடீரென மழை பெய்தால், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீர், வெளியேற முடியாமல் சாக்கடை போன்று தெருக்களில் குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோயை பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் சாத்தங்குப்பம் பகுதி, விவசாய நிலங்களாக இருந்தது. அப்போது உருவாக்கப்பட்டு இருந்த மழைநீர் வடிகால்வாய்கள், தற்போது குப்பை கொட்டும் இடங்களாக மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி தற்காலிக கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags : homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை