×

70 லட்சம் கேட்டு ஒப்பந்ததாரர் காரில் கடத்தல்: 2 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர்

சென்னை, ஜன.3: சென்னை அண்ணாநகரில் ₹70 லட்சம் கேட்டு ஒப்பந்ததாரரை தாக்கி காரில்  கடத்திய வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47). பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர், நேற்று காலை சாந்தி காலனி  கே.பிளாக் வழியாக நடைபயிற்சி சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த 4 பேர், திடீரென ரவிச்சந்திரனை இழுத்து காரில் கடத்தினர்.
அப்போது, காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என ரவிச்சந்திரன் கூச்சலிட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தனர். உடனே இதுபற்றி அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இணை கமிஷனர் விஜயகுமாரி மற்றும் அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் போலீசார், அப்பகுதி மக்களிடம்  விசாரணை செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரில் ரவிச்சந்திரனை கடத்தியது தெரியவந்தது.

மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காரில் கடத்திய மர்ம கும்பல் யார்?, எதற்காக கடத்தினார்கள்? என பல் வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் இது தொடர்பாக அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, புளியந்தோப்பு, அம்பத்தூர்  இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருமங்கலத்தில் அந்த கார் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த இருவர் பிடிபட்டனர். மேலும் இருவர் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், காரில் கடத்தப்பட்ட ரவிச்சந்திரனை மீட்டு, கடத்திய இருவரையும் கைது செய்து அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், தேனியை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கு ரவிச்சந்திரன் ₹70 லட்சம் தரவேண்டும் என  கூறப்படுகிறது. இதனை உரிய காலத்தில் கொடுக்காமல், காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தனது நண்பர்கள் ஜோதிகுமார், தினேஷ், புருஷோத்தமன் இவர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனை காரில் கடத்தியது தெரிந்தது. இந்த வழக்கில் தப்பி ஓடிய ஜெயக்குமார் மற்றும் ஜோதிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : contractor ,car abduction ,
× RELATED நெல்லை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை..!!