×

எழும்பூரில் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தின் திட்ட குறைபாடுகளை சரி செய்ய அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கட்டிடத்தின் திட்ட குறைபாடுகளை சரி செய்ய தரும் அவகாசத்திற்குள் சரி செய்யவில்லை என்றால் சிஎம்டிஏ நடவடிக்கை எடுப்பதில் நீதிமன்றம் தலையிடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரை சேர்ந்த ஜாகிர் உசேன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எழும்பூர் வீராசாமி தெருவில் எனக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்திற்கான திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (சிஎம்டிஏ) மனு கொடுத்தேன். அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனது கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். எனவே எனது கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றுமாறும், கட்டிடத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு கால அவகாசம் தருமாறு சிஎம்டிஏவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:மனுதாரர் தனது கட்டிட திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய கால அவகாசம் கேட்கிறார். கட்டிட குறைபாடுகளை சரி செய்யும் வரை ஜனவரி 1ம் தேதி முதல் 5 மடங்கு மின்கட்டணம் கட்ட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மனுதாரருக்கு கட்டிடத்திற்கான திட்ட குறைபாடுகளை சரிய செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதே ேநரத்தில் மனுதாரர் கூறியதுபோல் குறைபாடுகளை சரி செய்வது வரை 5 மடங்கு மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த தொகையை அவரது வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்க கூடாது. கட்டிட குறைபாடுகளை சரி செய்யவில்லை என்றால் சிஎம்டிஏ நடவடிக்கை எடுப்பதில் நீதிமன்றம் தலையிடாது.  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : building ,Egmore: High Court ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...