×

திருத்தணி முருகன் கோயிலில் திருட்டு எதிரொலி உண்டியல் பணம் எண்ணும் பணியை தொண்டு நிறுவனம் செய்யக்கூடாது: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் போது திருட்டு நடந்ததை தொடர்ந்து அப்பணிகளுக்கு தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் பக்தர்கள் மட்டுமே உண்டியல் எண்ண அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 ேகாயில்கள் உள்ளது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் ஒவ்வொரு மாதமும் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை கோயில் உண்டியல் திறக்கப்படுகிறது. இவ்வாறு உண்டியல் திறக்கும் போது மண்டல இணை ஆணையர், கோயில் நிர்வாக அலுவலர், அறநிலையத்துறை ஆய்வாளர் ஒருவர், பக்தர் ஒருவர் முதல் 10 பேர் வரை இருக்கலாம். இவர்கள் உண்டியல் எண்ணி முடித்த பிறகு, உண்டியலில் இவ்வளவு தான் பணம், நகை உள்ளது என்பதற்காக அனைவரும் கையொப்பமிட்டு ஓப்புதல் பெற வேண்டும். அதன் பிறகு தான், அந்த உண்டியல் பணம் வங்கிகளில் ேபாடப்படுகிறது. ஆனால், ஒரு சில கோயில்களில் பொதுமக்களை வைத்து உண்டியல் எண்ணாமல் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் உள்ள ஒரு சிலரை வைத்து கோயில் உண்டியல் எண்ணுகின்றனர். இது, சட்ட விரோதம் என்றாலும் ஒரு சில கோயில்களில் அவர்களை வைத்து உண்டியல் எண்ணுகின்றனர்.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 20ம் தேதி தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், கோயில் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களை வைத்து உண்டியல் எண்ணப்பட்டது. அப்போது தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் ₹90 ஆயிரம், மூன்றரை சவரன் தங்க நகையை திருடி வைத்திருந்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் பக்தர்களை பயன்படுத்தாமல் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தியது ஏன்? என விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் உண்டியல் எண்ண வருவதில்லை என்பதால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களை வைத்து பணம் எண்ணுவதாக கூறியிருந்தது. இதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகம் சார்பில் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, உண்டியல் எண்ணும் பணியை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த பணிக்கு பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  பக்தர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. அதையும் மீறி அவர்களை பணியில் ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட கோயில் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags : NGOs ,theft ,Tiruni Murugan Temple: Charity Department Action Directive ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...