×

ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பதற்கு கோவளம் பகுதி நிலத்தின் தன்மைகள் குறித்து ஆய்வு: மாநகராட்சி திட்டம்

சென்னை: ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பதற்கு கோவளம் வடிநிலப்பகுதிகளில் நிலத்தின் தன்மைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாறு மற்றும் கூவம் பகுதிகளில் உலக வங்க நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்  கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கோவளம் வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை  ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  360 கிலோ மீட்டர் நீளம்  கொண்ட கோவளம் வடிநிலப்பகுதியில் ₹1243 கோடி செலவில்  ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த திட்டம்  எம் 1 (பள்ளிக்கரணை), எம் 2 தெற்கு பங்கிங்காம்), எம் 3 (தென்மேற்கு கடற்கரை) என்று 3ஆக பிரித்து செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லுர் பகுதிகளை உள்ளடக்கிய தென்மேற்கு கடற்கரை வடிநில பகுதிகளில் 52 கி.மீ நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்  (எம் 3)  அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ₹270 கோடி மதிப்புள்ள இந்த திட்ட அறிக்கைக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கி அனுமதி அளித்தது.

இந்நிலையில் எம் 1 மற்றும் எம் 2 பகுதியில் நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: எம் 1 மற்றும் எம் 2 பகுதிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எம் 2 பகுதியில் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையோரங்களில் சிறிய அளவிலான மழைநீர் அமைக்கப்படவுள்ளது. இதே போன்று எம் 1 பகுதியில் 111 கிலோ மீட்டர் நீளத்திற்கு சிறிய அளவு மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு மூலம் மழைநீர் வடிகால் அமைக்க முடியுமா? என்பது கண்டறியப்படும். இந்த பணிகளுக்காக ₹45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட 45 நாட்களில் பணிநிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர். கோவளம் வடிநிலப்பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டும் பணிக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுடன் பிப்ரவரி இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kovalam Area Land Properties ,Rainwater Harvesting: Municipal Plan ,
× RELATED ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்...