×

கோயம்பேடு மார்க்கெட் நுழைவாயில் பாதையில் இரும்பு குழாய்களில் 7 பேர் கால்கள் சிக்கின: நீண்ட நேரம் போராடி மீட்பு

அண்ணா நகர்: கோயம்பேடு மார்க்கெட் நுழைவாயிலில் உள்ள இரும்பு குழாய்களால் ஆன பாதையில், 7 பேரின் கால்கள் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டன. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என தனித்தனி மார்க்கெட்டுகள் இயங்கி வருகிறது. சென்னை மற்ரும் புறநகர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு மார்க்கெட்டின் நுழைவாயிலிலும் மாடுகள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக 1ம் கேட் இருந்து 18ம் கேட் வரையில் இரும்பு குழாய்களால் ஆன நுழைவாயில் தடுப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மழை அதிகமாக பெய்ததால் கோயம்பேட்டில் மார்க்கெட் முழுவதும் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த குழாய்களால் ஆன பாதை முழுவதும் மழைநீரில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் மூன்று சக்கர சைக்கிளில் கொத்தமல்லி மூட்டையை ஏற்றி சென்ற கிருஷ்ணன் (42), காய்கறி வாங்க வந்த அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (40) ஆகியோரின் கால்கள் அந்த இரும்பு குழாய்களில் மாட்டிக்கொண்டது. இதனால் அவர்கள் கால்களை வெளியே இழுக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். உடனே அவர்களுக்கு உதவி செய்ய சிவா என்பவர் சென்றார். அப்போது அவரது கால்களும் சிக்கியது. மேலும் அவரை காப்பாற்ற சென்ற சிஎம்டிஏ ஊழியர் ஒருவரின் கால்களும் சிக்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தகவலறிந்து கோயம்பேடு போலீசார், தீயணைப்பு வீரர்கள், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு இரும்பு குழாய்களில் மாட்டிக்கொண்ட இரண்டு பேர் மீட்கப்பட்டனர். இதில் கிருஷ்ணன் என்பவரது கால்கள் ஆழமாக மாட்டிக்கொண்டதால் சுமார் 2 மணி நேரம் ஆகியும் கால்களை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இயந்திரம் மூலம் குழாய்களை அறுத்து இருவரையும் மீட்டனர். இதற்கிடையே இவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் காலும் சிக்கியது. சாதுர்யமாக உடனே காலை வெளியே எடுத்ததால் அவர் தப்பிவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்கும் வகையில் 1ம் நம்பர் கேட் முதல் 18ம் எண் கேட் வரை முழுவதுமாக இடைவெளி இல்லாதபடி இரும்புத்தகடு வைத்து குழாய்கள் அடைக்கப்பட்டது.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...