×

ஊரக உள்ளாட்சி இரண்டாம்கட்ட தேர்தல் 6 ஒன்றியங்களில் 77.05% வாக்குப்பதிவுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்

விருதுநகர், டிச.31:  விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 6 ஒன்றியங்களில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 77.05 சதவீத வாக்குகள் பதிவானது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் ஆகிய 6 ஒன்றியங்களில் 1,504 பதவிகளுக்கு 1,114 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 59 பேரும், 97 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 425 பேரும், 242 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 853 பேரும், 1,155 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3060 பேரும் ஆக 1,504 பதவிகளுக்கு 4,397 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1,114 வாக்குசாவடிகளில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு பிறகு வந்த வாக்காளர்கள் டோக்கன் வழங்கி ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 80,021 வாக்காளர்கள், விருதுநகர் ஒன்றியத்தில் 1,36,073 வாக்காளர்கள், காரியாபட்டி ஒன்றியத்தில் 58,917 வாக்காளர்கள், திருச்சுழி ஒன்றியத்தில் 69,012 வாக்காளர்கள், நரிக்குடி ஒன்றியத்தில் 61,359 வாக்காளர்கள், சாத்தூர் ஒன்றியத்தில் 83,481 வாக்காளர்கள் என மொத்தம் 4,88,863 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 6 ஒன்றியங்களில் 9,171 ஆயிரம் அலுவலர்கள், 2,146 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.வாக்குச்சாவடிகள் பலவற்றில் சாய்வு தளம், இருக்கை வசதிகள், குடிநீர், நிழல் கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. சாய்வு தளம் இல்லாததால் வயதானவர்கள் படியேறி சென்று வாக்களிக்க சிரமப்பட்டனர். நேற்று வாக்குப்பதிவின் போது வெயிலின் தாக்கம் இருந்தது. பாவாலி ஊராட்சி அய்யனார் நகர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்த போது மேற்கூரை வசதி செய்யப்படாதால் வெயிலில் நின்று வாக்களித்தனர். மேலும் பல வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என வாக்காளர்கள் வருத்தப்பட்டனர்.

சாத்தூர்:  சாத்தூர் ஒன்றியத்தில் 184 வாக்குச்சாவடி மையத்தில் 2வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக  நடைபெற்றது. சாத்தூர் ஒன்றியத்தில் 2வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மொத்தம் 184 வாக்கு சாவடி மையத்தில் வாக்குபதிவு நடைபெற்றது. சத்திரபட்டி ஊராட்சி மன்றத்தில் உள்ள அமீர்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி கோட்டை மாரியம்மாள்  3 சக்கர சைக்கிளில் வந்து தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். படந்தால் பஞ்சாயத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் விருதுநகரில் 70.64 சதவீதம், சாத்தூரில் 75.33 சதவீதம், அருப்புக்கோட்டையில் 74.83 சதவீதம், காரியாபட்டியில் 87.66 சதவீதம், திருச்சுழியில் 79.61 சதவீதம், நரிக்குடியில் 83.58 சதவீதம் என மொத்தம் 77.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Tags : government ,electorate ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...