×

திமுக மாவட்ட பொறுப்பாளரிடம் இன்ஸ்பெக்டர் அடாவடி பேச்சு லட்சுமிபுரத்தில் பரபரப்பு

தேனி, டிச. 31: போடி சட்டமன்றத்திற்குட்பட்ட தேனி ஒன்றியம் லட்சுமிபுரத்தில் வாக்குச்சாவடியை பார்வையிட சென்ற திமுக மாவட்ட பொறுப்பாளரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடாவடித் தனமாக ஒருமையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம்,கம்பம் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. போடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், முன்னாள் தேனி ஒன்றிய சேர்மன் முனியாண்டி மகள் உதயமணி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த வார்டை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவினர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேலைசெய்வதை போல  தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிமுக நகர, ஒன்றிய நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணியாற்றி வந்தனர். இருந்தபோதும், இந்த வார்டில் திமுகவுக்கு அமோக ஆதரவு பெருகியிருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த வாக்குப்பதிவின்போது, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிமுகவினர் தாராளமாக சென்று வந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட வேட்பாளர்களை மட்டும் காலையில் இருந்தே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடி மையப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அவர் லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த இன்ஸ்பெக்டர் நளாயினி, ஏய் என்ன இங்க வர்ற என்றார்.இதனைக்கேட்ட மாவட்ட பொறுப்பாளர் மேடம், நான் திமுக மாவட்ட பொறுப்பாளர், வாக்குப்பதிவு நிலவரங்களை பார்வையிட வந்திருக்கிறேன் என பொறுமையாக தெரிவித்தார்.அப்போதும், இங்கே வர அனுமதியில்லை. வெளியே போ என ஒருமையிலேயே மீண்டும் திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனிடம் ஒருமையில் தகாதபடி பேசினார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. உடனே தொண்டர்களை சமாதானப்படுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தேனி மாவட்டத்தில் நேற்று அதிமுகவுக்கு சவாலான வார்டுகளில் எல்லாம் அதிமுகவுக்கு ஆதரவாக போலீசார் களமிறக்கப்பட்டனரோ என சந்தேகிக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடு இருந்தது.

Tags : Atawadi ,district officer ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி