×

தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை வழங்கப்படுமா?

தஞ்சை, டிச. 31: தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை வழங்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் என்பதால் சுற்றி பார்ப்பதற்கும், கோயிலில் உள்ள கலைநயமிக்க சிலைகள், கட்டிட கலைகளை பற்றி அறிந்து கொள்வதற்கும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினம்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
நடிகர் சிவாஜி கணேசன், கேரளா மாநிலத்தில் வீரபாண்டியன் கட்டபொம்மன் நாடகத்தில் நடித்தபோது அவரது நடிப்பின் திறமையை பாராட்டி அப்பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் 10 வயதுடைய யானை குட்டியை பரிசளித்தார். அந்த குட்டி யானை தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வழங்கப்பட்டது. அந்த யானைக்கு வீரபாண்டியன் கட்டபொம்மனின் கதாநாயகியான வெள்ளையம்மாள் என்ற பெயரை சூட்டினர். பின்னர் வெள்ளையம்மாளை தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வந்து பராமரித்தனர். தஞ்சை பெரிய கோயிலில் 30 ஆண்டுகள் இருந்த வெள்ளையம்மாள் யானை 2013ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக இறந்தது.

இதனிடையில் தஞ்சையில் நடந்த உலக தமிழ் மாநாட்டின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இக்கோயிலுக்கு குட்டி யானையை வழங்கினார். பின்னர் குட்டி யானைக்கு தடுப்பூசி போடாததால் அதுவும் இறந்தது. இதையடுத்து தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யானை வாங்கி தர முன்வந்தனர். ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் அதற்கான நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை பெரிய கோயிலில் யானை இல்லாமல் உள்ளது. தற்போது யானை நின்ற தாழ்வாரம் பழைய பொருட்கள், தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கும் இடமாக மாறிவிட்டது. இதுகுறித்து சமூக நல ஆர்வலரான வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில், யானை என்பது பழமையான கோயிலுக்கு அணிகலனாகும். ராஜராஜசோழன் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை அனைத்தையும் தஞ்சை பெரிய கோயிலுக்கு பயன்படுத்தி பிரமாண்ட வகையில் யாரும் கட்டிட முடியாத அளவுக்கு கட்டினான். அதனாலேயே கோயிலில் உள்ள சிவனை அனுதினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என எண்ணி தன்சிலையையும், தன் மனைவி சிலையையும் பிரதிஷ்டை செய்துள்ளான்.

உலக புகழ்பெற்ற கோயிலில் யானை இல்லாமல் இருப்பது இந்து மதத்துக்கும், ஆகமத்துக்கும் புறம்பான செயலாகும். தொல்லியல் துறையினர் கோயிலாக பார்க்காமல் கட்டிட கலையாக பார்ப்பதால் தான் யானை வாங்குவதில் பின் வாங்குகிறார்கள். மேலும் கோயில் நிர்வாகத்தினர் யானை வாங்கினால் அதற்கு வேண்டிய செலவுகள், பராமரிப்பு செய்ய வேண்டியதாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என யானை வாங்குவதில் அனுமதி கிடைக்கவில்லையென கூறி வருகின்றனர். கடந்தாண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், யானை இருந்த கோயிலில் யானை வளர்க்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அவர் அறிவித்து ஓராண்டுகான நிலையில் அதற்கான எந்தவிதமான நடவடிக்கை இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு, கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் உடனடியாக பெரிய கோயிலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனியார் ஒத்துழைப்புடன் யானையை கோயிலுக்கு வழங்க வேண்டும் என்றார்

Tags : Tanjore Big Temple ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...