×

பட்டுக்கோட்டையில் பழுதடைந்த உயர் மின்கோபுர விளக்குகள் சீரமைப்பு

பட்டுக்கோட்டை, டிச. 31: தினகரன் செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை பழுதடைந்த உயர் மின்கோபுர விளக்குகளை அதிகாரிகள் சீரமைத்தனர். பட்டுக்கோட்டை நகரத்தில் முக்கியமான சாலைகள் பல உள்ளன. பட்டுக்கோட்டையின் இதய பகுதியான மணிக்கூண்டு, பெரிய தெரு, பழனியப்பன் தெரு, பெரியகடைத்தெரு, தலையாரி தெரு, சின்னையா தெரு, வடசேரி ரோடு, மார்க்கெட், தேரடி தெரு உள்ளிட்ட தெருக்களில் அறந்தாங்கிரோடு முக்கம் பகுதியும் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாகும். அறந்தாங்கிமுக்கம் காந்தி சிலை அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் நான்கு ரோடு சந்திப்பு பகுதி என்பதால் உயர் மின்கோபுர விளக்கு (ஹைமாஸ்லைட்) பொருத்தப்பட்டது.உயர் மின்கோபுர விளக்கு பொருத்தப்பட்ட நோக்கம் அறந்தாங்கிரோடு முக்கம் பகுதி 4 ரோடு சந்திப்பு என்பதாலும், பொதுமக்கள் அதிகம் பேர் தினசரி கூடுவதாலும், விபத்துக்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதாகும். இந்த விளக்கை பட்டுக்கோட்டை நகராட்சி பராமரித்து வருகிறது. இந்த உயர் மின்கோபுர விளக்கில் 5 ஹாலஜன் (பல்புகள்) விளக்குகள் உள்ளது. துவங்கிய காலத்திலிருந்து இந்த விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தது. இடை இடையில் ஒரு சில விளக்குகள் எரியாமல் இருக்கும். உடனே நகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு எரியவிடுவர்.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் இந்த உயர் மின்கோபுர விளக்குகள் பழுதடைந்து எரியாமல் போனது. மீண்டும் விளக்குகளை சரி செய்தது நகராட்சி. அதைதொடர்ந்து மீண்டும் விளக்குகள் பழுது ஏற்பட்டு 5 விளக்குகளில் 2 விளக்குகள் மட்டும் எரிந்து வருவதாகவும், மீதி 3 விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் ஒரு பகுதி வெளிச்சமாகும், மற்றொரு பகுதி இருட்டாகவும் உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் விபத்துக்கள் அதிகம் நடப்பதாக கடந்த 21ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர் மின்கோபுர விளக்குகளில் உள்ள ஹாலசன் பல்புகளை சரி செய்தனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து...