×

விடுமுறையில் முடக்கப்படும் ஏடிஎம்கள்

பரமக்குடி, டிச.31:  மாவட்டத்தில் கிராமப்புற வங்கி ஏடிஎம் மையங்கள் விடுமுறை நாட்களில் செயல்படாமல் முடக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து வங்கி ஏடிஎம் மையங்களின் செயல்பாடுகள் வாரத்தில் பல நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமங்களில் உள்ள ஏடிஎம் மையங்களே அதிகமாக முடக்கப்பட்டு வருகிறது. நெட்வொர்க் பிரச்னை வந்தால் அதை சரி செய்ய பல நாட்கள் எடுத்து கொள்கின்றனர். பணம் இல்லாதது, மெஷினில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை கூட பல நாட்கள் சரி செய்யாமல் இருப்பது என கிராமப்புற ஏடிஎம்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுபோல் வேலை நாளான வெள்ளி கிழமைக்கு பிறகு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மெஷின்களில் பணம் வைக்காமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. விடுமுறை தினங்கள் முடிந்து மீண்டும் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு மேல் தான் மீண்டும் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படும். வாரந்தோறும் சனி, ஞாயிறன்று மையங்கள் பெயரளவிற்கு திறந்திருந்தாலும் பணம் இருப்பதில்லை.

நூறு நாள் வேலை திட்டம், முதியோர் பென்சன், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அதிகப்படியானோர் கணக்கு வைத்திருக்கும் அரசு வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து பணம் இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தனியார் வங்கி ஏடிஎம்களிலும் இதேநிலையே காணப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் பல்வேறு தரப்பினரும் பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது, ‘எல்லாம் டிஜிட்டல் மயம், ஆன்லைன் மூலமே அனைத்தும் செய்யலாம் எனக்கூறிய நிலையில் மாவட்ட கிராமங்களில் ஏடிஎம் தொடர்ந்து செயல்படுவதே கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஏடிஎம்களில் குறைந்த அளவில் பணம் வைக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பிரச்னை ஏற்பட்டு வருகிறது. விடுமுறை நாட்கள் தொடர்ந்து வந்தால் கூடுதல் பணம் நிரப்பப்படும் என கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் செய்வதில்லை. வங்கிகளில் கேட்டால் எங்களுக்கும், ஏடிஎம்மிற்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். ஏடிஎம்களை முன்புபோல் அனைத்து நாட்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை