×

தேர்தலில் ஒரே குளறுபடி சின்னம் சரியாக தெரியவில்லை ஏமாற்றத்தில் வாக்காளர்கள்

சிங்கம்புணரி, டிச.31: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் 21 ஊராட்சி தலைவர், 6 ஒன்றிய குழு உறுப்பினர், 1 மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நேற்று நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி கை உருளை சின்னத்திலும், இந்திராணி பூட்டு சாவி சின்னத்திலும், மல்லிகா ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதில் வாக்குசாவடி முன்பு ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர் அறிவிப்பு நோட்டீஸில் கை உருளை சின்னம் மங்கலாக தெரிந்தது. அந்த சின்னத்தின் மீது மர்ம நபர் ஒருவர் வேட்பாளர் நோட்டீசில் உள்ள சின்னத்தை வெட்டி ஒட்டினார். இதற்கு எதிர் தரப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதேபோல் தர்மபட்டி, கொண்டபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 1வது வார்டில் உள்ள வாக்காளர்கள் 37 பேர் நீக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் வேறு வேறு வார்டுகளுக்கு அலைகழிக்கப்பட்டனர். சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம், மண்டல துணை தாசில்தார் சாந்தி தலைமயைில் விசாரணை நடைபெற்றது. இதில் நீக்கப்பட்ட 37 பேர் 7 வது மற்றும் 8வது வார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் இருந்து புதிய வரையறை செய்யப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல் வராததால் குழப்பம் ஏற்பட்டது. புதிய வரையறை செய்யப்பட்ட வார்டு விபரங்கள் வந்தபின்பு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஒன்றியத்தில் உள்ள 79 வாக்குசாவடிகளுக்கு 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு வரவில்லை என்ற புகார் உள்ளது. இதனால் இறுதி நேரத்தில் பணி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், தனியார் கல்லூரி மாணவிகளை கொண்டு தேர்தல் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி பகுதியில் மாற்று திறனாளிகள், முதியர்களை சக்ர நாற்காலி வசதியின்றி தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags : election ,voters ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...