×

புத்தாண்டை கொண்டாட மலைகளின் இளவரசியை சுற்றுலாப்பயணிகள் முற்றுகை

கொடைக்கானல், டிச. 31: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு குவிந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நேற்று அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் . முதற்கட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் முடிந்த காரணத்தினால் அந்த பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்தனர் கடந்த சில தினங்களாகவே கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. தற்போது குளிர் சீசன் நிலவுவதால் இதனை அனுபவிப்பதற்காகவும் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், க்ரீன் வேலி வியூ எனப்படும் தற்கொலை முனை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தெரிந்தது.

இதில் தூண் பாறை பகுதியில் மேகமூட்டம் அதிகளவில் இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து ரசிக்கும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் மற்றும் டூவீலரில் ரைடிங் சென்று சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கொடைக்கானலில் முன்பு பெய்த தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பியர் சோழா நீர்வீழ்ச்சிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கையழகை கண்டு ரசித்தனர். நேற்று பகலில் நல்ல வெயில் அடித்தாலும் லேசான குளிர் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர்.

Tags : mountains ,New Year ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!