×

1,000 போலீசார் பாதுகாப்பு பணி 50 இடங்களில் வாகன சோதனை


திருச்சி, டிச.31: நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாநகரில் பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாநகர கமிஷனர் வரதராஜூலு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு (2020) கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெறும். புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.அதுபோல் திருச்சியில் உள்ள சகாயமாதா பசிலிக்காவில் புத்தாண்டு கொண்டாடட்டத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதுபோல் மேலப்புதூர் ஆரோக்கியமாதா, சத்திரம் தூய ஆண்டவர், எடத்தெரு பழைய கோயில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.அதுபோல் புத்தாண்டை முன்னிட்டு ரங்கம் ரெங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், மலைக்கோட்டை, கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனம் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

புத்தாண்டு பிறப்பையொட்டி நடக்கும் கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகளும், தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர கமிஷனர் வரதராஜூ கூறுகையில், புத்தாண்டு பாதுகாப்பிற்காக மாநகரில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.  புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஓட்டலில் மட்டும் நள்ளிரவு 1 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி இன்றி விதிமுறை மீறி ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஏதேனும் விழா நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் தேவாலயங்களுக்கு செல்லும் பெண்களிடம் புத்தாண்டு என்ற பெயரில் அநாகரீகமற்ற முறையில் கேலி, கிண்டல் மற்றும் வாழ்த்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரோந்து போலீசார், பேட்ரோல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குடிபோதையில் பைக் மற்றும் வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டறிய பிரீதிங் அனலைசர் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இன்று இரவு 9 மணிமுதல் நாளை (1ம் தேதி) காலை 9 மணிவரை போலீசார் குடிபோதையை கண்டறியும் கருவியுடன் சோதனை நடத்துவார்கள்.

அதை தொடர்ந்து நள்ளிரவு பைக் ரேஸ் நடக்கும் பகுதிகளான கோர்ட் சாலை, கன்டோன்மென்ட் ராஜா காலனி பகுதியில் சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநகரில் 50 இடங்களில் ஜிக்ஜாக் வாகன தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  விபத்தில்லா புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகர கமிஷனர் வரதராஜூ கூறினார்.

Tags : locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு