×

மேட்டுப்பாளையம் அருகே மலை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு


மேட்டுப்பாளையம், டிச.31:கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்டது மூணுகுட்டை ஆதிவாசி மலை கிராமம். மேட்டுப்பாளையம், காரமடையிலிருந்து கோப்பனாரி வழியாக இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளது ஆனால் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. அவசரத்திற்கு  மருத்துவமனைக்கு செல்வதற்குகூட போதுமான வசதி இல்லை. அத்தியாவசிய தேவைக்கு இவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கோப்பனாரி வந்துதான் பஸ் ஏற வேண்டும்.  இந்த குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கும், மக்கள்  பிரதிநிதிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே உள்ளாட்சித் தேaர்தலை புறக்கணிப்பதாக மூணுகுட்டை கிராம மக்கள் அறிவித்தனர்.இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மூணுகுட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலையிலிருந்து மலை கிராம மக்கள் யாரும் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கள் கிராமத்திற்கு கோப்பனாரி வரை முறையான சாலை அமைக்க உரிய அனுமதி கடிதத்தை காண்பித்தால் மட்டுமே வாக்களிப்போம் என கூறி  வாக்குப்பதிவு முடியும் வரை கிராம மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். வாக்கு மையம் முன்பு ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புக்கொடியுடன் நின்றனர். மூனுகுட்டையில் மொத்தம் 130 வாக்குகள் உள்ளன. கிராம மக்களின் போராட்டத்தை அறியாத இரு முதியவர்கள் மட்டும் வாக்களித்துள்ளனர்.

Tags : Hill village ,Mettupalayam ,election ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது