×

மேட்டுப்பாளையம் முகாமில் இரட்டை திருப்பதி யானைக்கு புரோட்டீன் பவுடர்

கோவை, டிச. 31: கோவை மேட்டுப்பாளையம் கோயில் யானைகள் முகாமில் உள்ள இரட்டை திருப்பதி யானை லட்சுமிக்கு சிறப்பு மருந்தாக புரோட்டீன் பவுடர் வழங்க கால்நடை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இதில், தமிழகம், பாண்டிச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த யானைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஹெல்த் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யானையின் உடல் நலம் தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த 24ம் தேதி முகாமில் பங்கேற்றுள்ள 28 யானைகளின் சானங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர், கோவையில் உள்ள கால்நடை ஆய்வகத்தில் சானங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. அதன்மூலம் யானைகளுக்கு குடற்புழு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும், அனைத்து யானைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  

ஆனால் முகாமில் பங்கேற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இரட்டை திருப்பதி யானை லட்சுமிக்கு புரோட்டீன் குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால், சிறப்பு கவனம் எடுத்து லட்சுமிக்கு ஸ்பெஷல் புரோட்டீன் பவுடர் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து லட்சுமிக்கு புரோட்டீன் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது. மவுத் ஆர்கன் வாசிப்பதில் யானை லட்சுமி கில்லாடி. இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், “லட்சுமி யானை மற்ற யானைகளைவிட சுறுசுறுப்பாக இருக்கிறது. மிகவும் வேகமாக வாக்கிங் செல்கிறது.  நல்ல ஆரோக்கியமாக உள்ளது. பாகன் சொல்வதை கேட்டு நடக்கிறது. ஆனால், உயரம் காரணமாக உடல் மெலிந்து காணப்படுகிறது. இதனால், லட்சுமிக்கு புரோட்டீன் தேவையுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறப்பு மருந்தாக லட்சுமிக்கு மட்டும் புரோட்டீன் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

Tags : Twin Tirupathi Elephant ,Mettupalayam Camp ,
× RELATED மேட்டுப்பாளையம் முகாமில் மவுத்...