×

வ.உ.சி.பூங்கா சீரமைப்பு பணி மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு

ஈரோடு, டிச. 31:  ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வ.உ.சி. பூங்காவில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 ஈரோடு மாநகர பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக வ.உ.சி.பூங்கா உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா 10 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவில் சிறுவர்கள் ரயில், செயற்கை நீரூற்று, விலங்குகள் சரணாலயம் போன்றவைகள் இருந்தது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் வனவிலங்கு சரணாலயம் அடைக்கப்பட்டு விலங்குகள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவர் ரயிலும் நிறுத்தப்பட்டது. மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ அருகிலேயே சிறுவர் பூங்காவும் கட்டப்பட்டது. இந்த பூங்காக்கள் உரிய பராமரிப்பு செய்யாத நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.6.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பூங்காவில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த பூங்காவில் புல்வெளிகள், நடைபாதைகள், உணவு வழங்கும் பகுதி, குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள், மலர் கண்காட்சி போன்ற பணிகள் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது காணும் பொங்கலுக்கு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.
 இந்த ஆண்டு பூங்கா சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சிறுவர் பூங்கா பணியை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடிக்கும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வ.உ.சி. பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் பெரிய பூங்காவான வ.உ.சி.பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய வகையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.   இதில் சிறுவர் பூங்காவில் பணிகளை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் வ.உ.சி.பூங்கா புதுப்பொழிவு பெறும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...