×

கோயம்பேடு மார்க்கெட்டில் இரும்பு தடுப்புக்குள் சிக்கிய வியாபாரி:பத்திரமாக மீட்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் மாடுகள் உள்ளே நுழைவதை தடுக்க, அதன் 1 முதல் 14 வரையிலான கேட் நுழைவுவாயில்களில் ₹55 லட்சம் மதிப்பில் சீரான இடைவெளியுடன் கூடிய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கோயம்பேடு பகுதியை சேர்ந்த முருகன் (40) வியாபாரி, கோயம்பேடு மார்க்கெட்டில் கொய்யாப் பழங்களை வாங்கிக்கொண்டு தள்ளுவண்டியுடன் நடந்து வந்தார். அப்போது 18ம் நம்பர் கேட்டில் உள்ள இரும்பு குழாய் தடுப்பு கம்பிகளுக்கு இடையே அவரது கால் மாட்டிக் கொண்டது. இதனால் வலிதாங்காமல் அவர் அலறினார். இதனை கண்டு சக வியாபாரிகள் அவரை மீட்க முயற்சித்தும் காலை வெளியே எடுக்க முடியவில்லை. தகவலறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் இரும்பு கம்பிகளை அறுக்கும் இயந்திரத்தின் மூலம் குழாய்களை அறுத்தனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு, இரும்பு குழாய்களுக்கு இடையே சிக்கிய முருகனின் கால் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Dealer ,recovery ,Coimbatore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு