×

ஆள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் போதையில் பொய் புகார் அளித்த தொழிலதிபர் கைது: மதுரவாயலில் பரபரப்பு

சென்னை :  சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் முகேஷ். இவர் தான் ஒரு தொழில் அதிபர் என்றும், தன்னை பிரபல ரவுடி தில் பாண்டி என்பவர் மற்றும் பெயர் தெரியாத ஒருவரும் கடத்தி  தனது கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தன்னை பணம் கேட்டு மிரட்டியதாகவும், தான்  காரிலிருந்து தப்பித்து மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் மனு அளித்தார். அதன்படி புகாரை விசாரணை செய்ததில் கடத்தியதாக கூறப்பட்ட ரவுடி தில் பாண்டி தலைமறைவான நிலையில் அவருடன் இருந்த மற்றொரு நபரான பிரசாத் என்பவரை வில்லிவாக்கத்தில் வைத்து கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தில் பாண்டியும்,  முகேஷும் நெருங்கிய நண்பர்கள். சம்பவத்தன்று  இருவரும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததால் பிரசாத் என்பவரை கார் ஓட்ட டிரைவராக வரும் படி கேட்டுள்ளனர்.

பிரசாத் காரை ஓட்டி வந்த போது தில்பாண்டியும், முகேஷும் காரின் பின் பக்கம் அமர்ந்து மது அருந்தி கொண்டே வந்துள்ளனர். அப்போது தில் பாண்டிக்கும்,  முகேசுகும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே கைகலப்பு ஆனபோது முகேஷ் என்பவர் காரில் இருந்து குதிக்க முற்பட்டதாகவும், இதனால் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகில் காரை ஓரமாக நிறுத்தியபோது முகேஷ் காரை விட்டு கீழே இறங்கி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் உள்ளே சென்று விட்டதாக கார் டிரைவர் பிரசாத் விசாரணையில் தெரிவித்தார்.  இதனையடுத்து, முகேஷ் கடத்தப்பட்டதாக கொடுத்த புகார் பொய்யான புகார் என தெரியவந்தது.  இதில் முகேஷ் மீது செங்குன்றம், எண்ணூர், எழும்பூர், அம்பத்தூர் மற்றும் கர்நாடக மாநிலம் சில காவல் நிலையத்திலும்  பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர் ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் என்பவரது நெருங்கிய கூட்டாளி. இவரும் எண்ணூர் தனசேகரனும் சேர்ந்து ஒரு கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து, முகேசை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், முகேசின் செல்போனை ஆய்வு செய்தபோது குடிபோதையில் இருவரும் கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது போல் படங்களை எடுத்து வைத்துள்ளார். யார் பெரிய ஆள் என்ற மோதலில் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது.

Tags : Businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்