×

30 ஆண்டுகாலமாக ரயில் விபத்து, தற்கொலையில் இறந்தவர்களின் உடலை மீட்பவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: அரசு பணி கிடைக்க உதவுவதாக உறுதி

சென்னை: 30 ஆண்டுகாலமாக ரயில் விபத்து, தற்கொலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் அரசு பணி கிடைக்க உதவுவதாக உறுதியளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியை மேற்கொள்ளும் முருகன் என்பவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். இது தொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்த உடல்களை மீட்கும் பணியை தனது வறுமைச் சூழலிலும் 30 ஆண்டுகளாகச் செய்து வரும் மகத்தான மனிதர் முருகனை, நேரில் வரவழைத்துச் சந்தித்தேன்.

முருகனுக்கு அரசு பணி கிடைக்க உதவி செய்யுமாறு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறனை கேட்டு கொண்டுள்ளேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் முருகன் அளித்த பேட்டி: நான் 16 வயதில் இருந்தே சென்னை சென்ட்ரலில் தான் இருக்கிறேன். சென்னை சென்ட்ரலை சுற்றி எங்கே எங்கேயாவது விபத்து ஏற்பட்டாலும், ரயிலில் அடிபட்டாலும், ரயிலில் வரும்போது மரணம் அடைந்தோலோ அல்லது அனாதையாக இறந்து கிடந்தாலும் அவர்களின் உடல்களை கைப்பற்றி, சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் சேர்ப்பது தான் எனது வேலை.  எனது செயலை கேள்விப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வந்து பாருங்கள் என்று கூறினார். இதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MK Stalin ,deceased ,suicide ,train accident ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...