×

தலைவாசலில் பரபரப்பு வாக்குச்சாவடி மையத்திற்குள் ஓட்டு கேட்ட பூத் ஏஜெண்டுகள்

ஆத்தூர், டிச.31: தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றி பூத் ஏஜெண்டுகள் சிலர், குறிப்பிட்ட சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர். இதையடுத்து அங்கு பணியாற்றி எதிர்தரப்பினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், ஓட்டு போட வந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில், வேட்பாளர்களால் நியமிக்கப்பட்டிருந்த பூத் ஏஜெண்டுகள், வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளேயே, ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்கு கேட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மற்ற வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூத் ஏஜெண்டுகளை, அறையில் இருந்து வெளியேறும்படி கூறினர்.
ஆனால், மையத்துக்குள் ஓட்டு கேட்ட தரப்பினர் வெளியேற மறுத்ததுடன், அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டு போட வந்திருந்த பெண்கள், அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியதுடன், தங்களது வாக்குகளை பதிவு செய்யாமல் திரும்பிச் சென்றனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடி மையத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.  தொடர்ந்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, பிரச்னைக்குரியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

Tags : Booth agents ,polling station ,headquarters ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...