×

ஒற்றை யானை துரத்தியதால் கிணற்றில் விழுந்த பள்ளி ஊழியர்

தேன்கனிக்கோட்டை, டிச.31:   கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த 60 யானைகள், தேன்கனிக்கோட்டையில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மாரசந்திரம், லக்கசந்திரம், திம்மசந்திரம், ஜார்கலட்டி, மேகலகவுண்டனூர், கலகோபசந்திரம், பச்சபனட்டி, கிரியனப்பள்ளி, பேவநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் ராகி, சோளம், தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியை சேர்ந்த தங்கமலை(48) என்பவர் தனியார் பள்ளியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, வீட்டிலிருந்து மாரசந்திரம் கிராமத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோர மரத்தின் பின்னால் இருந்து வந்த ஒற்றை யானை, சாலையின் குறுக்கே வந்து, தங்கமலையை தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கமலை, யானையிடமிருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலை அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தொடர்ந்து, கிணற்றில் விழுந்த அவர் அபாய குரல் எழுப்பவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த தங்கமலையை மீட்டனர். பின்னர், பலத்த காயமடைந்த அவரை தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யானை துரத்தியதில் தனியார் பள்ளி கேஷியர் கிணற்றில் விழுந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags : School employee ,well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...