×

வாக்கு சாவடிக்குள் பிரசாரம் செய்ததை கண்டித்த பெண் இன்ஸ்பெக்டருடன், அதிமுக வேட்பாளர் கடும் வாக்குவாதம் நாகர்கோவில் அருகே பரபரப்பு

நாகர்கோவில், டிச.31 : வாக்குசாவடிக்குள் வாக்காளர்களை அழைத்து வந்த, அதிமுக வேட்பாளரை கண்டித்த பெண் இன்ஸ்பெக்டருடன், அதிமுகவினர் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அடுத்த இறச்சக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று,உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வார்டு உறுப்பினர்,ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது ஒன்றிய கவுன்சிலர் 7வது வார்டு பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் மகாராஜ பிள்ளை என்பவர் வாக்குசாவடிக்குள் ஆட்களை அழைத்து வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் வேட்பாளர் என்ற முறையில் வாக்குப்பதிவை நீங்கள் பார்வையிடலாம். ஆனால் வாக்கு சாவடிக்குள் நின்று கொண்டு ஓட்டு கேட்பது, வாக்காளர்களை அழைத்து வருவது போன்ற நடவடிக்கைகள் கூடாது. அப்படி இருந்தால் உடனடியாக வாக்கு சாவடியில் இருந்து வெளியே செல்லுங்கள் என்றனர்.

இதனால் மகாராஜ பிள்ளைக்கும், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குசாவடியில் இருந்து அதிமுக வேட்பாளர் மகாராஜ பிள்ளையை போலீசார் வெளியேற்றினர். இது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மகாராஜ பிள்ளை தகவல் தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன், தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவங்களை போலீசார் விளக்கினர். இதையடுத்து மகராஜ பிள்ளையிடம், போலீசாருக்கு இடையூறு செய்ய கூடாது. அவர்கள் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுரை கூறிவிட்டு நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர்.

Tags : AIADMK ,candidate clashes ,inspector ,Nagercoil ,campaigning ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...