கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை

திருக்கோவிலூர், டிச. 31: திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ஜெயா(25). இவருக்கும் திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயா 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் தாய் வீடான செட்டித்தாங்கல் கிராமத்திற்கு பிரசவத்திற்கு ஜெயா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  வீட்டில் இருந்த ஜெயாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு,  திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெயாவின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிறை மாத கர்ப்பிணி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sudden Death ,Death ,
× RELATED சிறை கைதி திடீர் சாவு