விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம்

விழுப்புரம், டிச. 31:    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உலக வங்கிநிதியுதவியுடன் தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில், ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிசெய்தல் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முதலீடுகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் மூலதனங்களை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு உட்பட்ட 120 ஒன்றியங்களில், 3,994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

 அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், விக்கிரவாண்டி, காணை, முகையூர், ரிஷிவந்தியம், மயிலம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் 419 ஊராட்சிகளில் இரண்டுகட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் அலுவலகத்தை கோலியனூர், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களிலும் ஆட்சியர் அண்ணாதுரை திறந்து வைத்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊரகபுத்தாக்கத்திட்டதில் செயல்அலுவலர் வேல்முருகன் கூறுகையில், கிராமப்புறங்களில் மகளிர், படித்த வேலைவாய்ப்பு இளைஞர்களை தொழில்முனைவோராக்குதல், கணினிபயிற்சி போன்ற பல திட்டங்கள் ஊரகபுத்தாக்கத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளை கொண்டு ஆய்வு செய்துள்ளோம். தற்போது கிராமத்திற்கு சென்று வளர்ச்சி குறித்து மகளிர்கள், ஊர்முக்கியஸ்தர்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் போடப்பட்டுள்ளது. இதன் பிறகு பயனாளிகள் தேர்வுசெய்து நிதியுதவிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். இதற்கு கமிட்டியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஆட்சியர் உள்ளார். அவருக்கு கீழ் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Villupuram District ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ₹2.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்