×

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நிறைவையொட்டி மலை உச்சியில் பிராயசித்த அபிஷேகம்

திருவண்ணாமலை, டிச.31: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைந்ததையடுத்து மகா தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் நேற்று பிராயசித்த அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவின் முக்கிய விழாவான மகாதீபம் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை பரணி தீபமும், மாலை கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.தீபத்திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் தீபமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தனர். இந்த மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசித்து வந்தது. இதையடுத்து மகாதீப கொப்பரை கடந்த 21ம் தேதி காலை மலை உச்சியிலிருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக நினைத்து வழிபடுவதால், தீபத்தின்போது, பக்தர்கள் மலை ஏறியதற்கு பிராயசித்த பூஜை தீபத்திருவிழா முடிவடைந்த பின்னர் கோயிலில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபத்திருவிழா நிறைவடைந்ததையடுத்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் பிராயசித்த பூஜை நடைபெற்றது.இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடந்தது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் புனித நீர் கலசத்தை மலை உச்சிக்கு கொண்டு சென்று, அங்குள்ள சுவாமி பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து சுவாமி திருப்பாதத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பிராயசித்த அபிஷேக பூஜையில் கோயில் இணை ஆணையாளர் ஆர்.ஞானசேகர், சிவாச்சாரியார்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அய்யம்பிள்ளை, வேதமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Abhishekam ,completion ,hill ,festival ,Thiruvannamalai ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்