×

புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் அறுந்துவிழும் மின்கம்பிகளால் தொடரும் விபத்து அபாயம்

புதுக்கோட்டை, டிச. 31: புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பிகள் அவ்வப்போது அறுந்து விழுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள், விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள பெரியநாயகிபுரம் வின்சென்ட் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்காக அவர்களது குடியிருப்புகளுக்கு மின்வாரியம் சார்பில் மின் இணைப்பு கொடுத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி அமைக்கப்பட்ட மின் கம்பிகளில் 14 இடங்களில் இணைப்பு போடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்சார கோளாறுகள் ஏற்பட்டால் இந்த இணைப்பு காணப்படும்  மின்கம்பிகள் அடிக்கடி எரிந்து கீழே விழுகின்றன. சமீபத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பாலசிங் மகன் தர்சன்(4) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தான். இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பிகள் அவ்வப்போது  அறுந்து விழுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்படும்  அப்பகுதி மக்கள், விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

   இதுகுறித்து சமூக ஆர்வலர் வக்கீல் காந்தி கூறுகையில், ‘‘வின்சென்ட் நகர் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் காணப்படும் மின்கம்பிகளில் ஏராளமான ஜாயிண்டுகள் உள்ளன. இதனால் உயர் அழுத்த மின்சாரம் பாயும் போது ஜாய்ண்டுகள் அறுந்து அதன் காரணமாக மின்கம்பிகள் கீழே விழும்போது விபத்து ஏற்படுவது தொடர்கதையாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இதுவிஷயத்தில் அக்கறை காட்டி போர்க்கால அடிப்படையில் இதை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Pudukkottai ,areas ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...