×

தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் 994 பூத்களில் வாக்குப்பதிவு

கோவில்பட்டி, டிச. 31: தூத்துக்குடி  மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தலையொட்டி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் உள்ள 994 பூத்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணிளை எஸ்.பி. அருண் பாலகோபாலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடந்தது. முதற்கட்ட தேர்தல் கடந்த 27ம் தேதி தூத்துக்குடி, கருங்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நடந்தது. இந்நிலையில் 2ம் கட்ட தேர்தல் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பதவிகளுக்காக நேற்று (30ம்தேதி) நடந்தது. இந்த 5 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 1,995 பதவிகளில் 720 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 1275 பதவிகளுக்கு 3,561 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இதில் 9 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 39 பேர், 85 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 399 பேர், 213 பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு 706 பேர், 968 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளுக்கு 2417 பேர் என மொத்தம் 3561 பேர் போட்டியிட்டனர். 2ம் கட்ட வாக்குபதிவிற்காக 5 ஒன்றியங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 994 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

 குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி ஒன்றியத்தில் 213 வாக்குச்சாவடிகள், கயத்தாறு ஒன்றியத்தில் 178, விளாத்திக்குளம் ஒன்றியத்தில் 195, புதூர் ஒன்றியத்தில் 163 மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 245 என 5 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 994 வாக்குச்சாவடிகளில வாக்குப்பதிவு நேற்று (30ம் தேதி) நடந்தது. இவற்றில் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 216 பூத்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  மேலும் 82 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுவதும் 68 வெப்கேமராக்கள் அமைக்கப்பட்டு, 66 மையங்களில் வீடியோபதிவு செய்யப்பட்டும் கண்காணிக்கப்பட்டது.  கடந்த 27ம் தேதி நடந்த முதல் கட்ட  தேர்தலில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி  பதவிகளுக்காக வேலன்புதுக்குளம்  பாண்டி ஆரம்பப்பள்ளியில் இருபாலருக்காக  அமைக்கப்பட்டிருந்த 27ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவில்  முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மறு வாக்குப்பதிவு நடத்த  மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (30ம் தேதி) காலை 7 மணி  முதல் மாலை 5 மணி வரை நடந்த மறு வாக்குப்பதிவிற்கு வந்த வாக்காளர்களுக்கு   இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த 2ம் கட்ட தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு 2500க்கும் மேற்பட்ட போலீசார், பட்டாலியன் போலீசார், முன்னாள் ராணுவனத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கோவில்பட்டி ஒன்றியத்தில் சிலை  கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மலைச்சாமி, டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலும்,  கயத்தாறு ஒன்றியத்தில் ஏடிஎஸ்பி மாதவன், டிஎஸ்பி பரமசிவன் தலைமையிலும்,  ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் காவலர் பயிற்சி பள்ளி ஏடிஎஸ்பி ஜேசுராஜ்,  டிஎஸ்பிக்கள் ரிவச்சந்திரன், கலைகதிரவன் தலைமையிலும், விளாத்திகுளம்,  புதூர் ஒன்றியத்தில் தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பிக்கள்  பீர்முகைதின், முகேஷ் ஜெயகுமார், பிரதாபன் தலைமையிலும் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 5 ஒன்றியங்களில் உள்ள 25 காவல்  நிலையங்களில் ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில்  காவலர்கள் அடங்கிய 25 அதிவிரைவு படையினரும், இதேபோல் எஸ்ஐ தலைமையில்  காவலர்கள் அடங்கிய 25 அதிவிரைவு படையினரும் என மொத்தம் 50 அதிவிரைவு  படையினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதவிர  வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ள எல்லைககளை கண்காணிக்கும் வகையில் ஒரு  இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் அடங்கிய 11 ரோந்து படையினர் வாகனங்களில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு உதவி ஆய்வாளர்  தலைமையில் 7 காவலர்கள் அடங்கிய படையினர் வாகனங்களில் ரோந்து பணியில்  ஈடுபடுத்தப்பட்டனனர். கூடுதலாக ஒரு எஸ்ஐ தலைமையில் காவலர்கள் அடங்கிய 21  போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 25  காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 29 இடங்களில் எஸ்ஐகள்  தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவுகள்  நடக்கும் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள இடங்களில் ஒரு எஸ்ஐ தலைமையில்  4 போலீசார் அடங்கிய காவல் துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர்.வாக்குப்பதிவுகளை கண்காணிக்கும் வகையில் 13  இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு எஸ்ஐ தலைமையில் 4 காவலர்கள்  அடங்கிய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் விளாத்திகுளம்,   கயத்தாறு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய  பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகளை எஸ்.பி.  அருண் பாலகோபாலன் நேரில் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜன.2ல் வாக்கு எண்ணிக்கை
 நேற்று நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குபெட்டிகள் அனைத்தையும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன்படி கோவில்பட்டி ஒன்றியத்திற்கான கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையம், கயத்தாறு ஒன்றியத்திற்கு கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், புதூர் ஒன்றியத்திற்கு புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் வாக்குப்பெட்டிகள் பத்திரமாகக் கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளும், இன்று 2ம் கட்டமாக பதிவாகும் வாக்குகளும் சேர்ந்து நாளை மறுதினம் (ஜனவரி 2ம் தேதி) எண்ணப்படுகின்றன.

Tags : polling booths ,Tuticorin district ,
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு