×

கூவம் கரையில் இருந்த 120 வீடுகள் அகற்றம்: போலீசாருடன் வாக்குவாதம்

சென்னை, டிச. 30: சென்னை தலைமை செயலகம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் கூவம் கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளில் முதல்கட்டமாக 120 வீடுகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் வார்டு 59க்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் 2100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளை காலி செய்ய கோரி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தனர்.ஆனால் இந்த பகுதி மக்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த வாரம் கூட இப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை காட்டினர்.இதையடுத்து சென்னை மாநகராட்சி 5வது மண்டல அதிகாரி லாரன்ஸ் தலைமையில் அந்த பகுதி மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மாதமும் ₹2500 வீதம் ஒரு வருடத்துக்கு பணம் தரப்படும் எனவும், குழந்தைகளுக்கு இலவச படிப்பு, பேருந்து வசதி ஆகியவை செய்து தருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதனை அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்து வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மாந்கராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளை இடிக்க அனுமதிக்க முடியாது என ஆவேசமாக முழக்கமிட்டனர். இதனால் அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இதனை தொடர்ந்து பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 120 வீடுகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. வீடுகளை இழந்த மக்கள் கண்ணீருடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு பெரும்பாக்கத்தில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்றனர். மற்ற வீடுகளும் விரைவில் இடித்து அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : houses ,shore ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...