×

பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கொட்டும் கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, டிச. 30: பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பேடு, திருக்கண்டலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், தனியாருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது.
இந்த தொழிச்சாலைகளில், தொழிலாளர்கள் பயன்படுத்திய உணவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கொட்டுகின்றனர். இந்த கழிவு பொருட்கள் மக்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தடி நீருடன் கலந்து மாசடைகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து குப்பை மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்படுகிறது. அந்த குப்பை மக்கி வண்டுகள், கொசுக்கள் மற்றும் விஷகிருமிகள் உற்பத்தியாகி வெளியேறுகிறது. இவை கடிப்பதால் தொற்று நோய் பரவும் வாய்ப்புள்ளது. மேலும், மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளத்தில் கலந்து மாசடையும் நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் குப்பைகளை கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.

Tags : river ,Kosasthala ,Periyapalayam ,
× RELATED குமரியில் பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு