×

மாவட்டத்தில் 152 வாக்குசாவடிகள் பதற்றமானவை

சூலூர், டிச.30: கோவை மாவட்டத்தில்  5 லட்சத்து 47 ஆயிரத்து 295 பேர் வாக்களிக்க உள்ளனர்.  மாவட்டம் முழுவதும் 415 வாக்கு பதிவு மையங்களில் 878  வாக்குச் சாவடிகள்  அமைக்கப்பட்டு இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 152 வாக்குச்   சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப் பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு  115 பஞ்சாயத்துக்களுக்கு இன்று நடைபெறுகிறது.  இதன் ஒரு பகுதியாக சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களை  அனுப்பும் பணி நேற்று காலை சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கியது. பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து   அவர் கூறியதாவது:
 நாளை (இன்று) நடைபெறும்  இரண்டாவது கட்ட தேர்தலில் கோவை மாவட்டத்தில்  5 லட்சத்து 47 ஆயிரத்து 295 பேர் வாக்களிக்க உள்ளனர். மாவட்டம் முழுவதும் 415 வாக்கு பதிவு மையங்களில் 878  வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 152 வாக்குச்  சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப் பட்டுள்ளது.  80  வாக்குச் சாவடிகளில் மைக்ரோ  அப்சர்வர்கள் பணியமர்த்தப்பட்டு  தேர்தலை கண்காணிக்க உள்ளனர். வாக்குப்பதிவுகள் 35 வெப் கேமராக்கள் மூலமும் 37 வீடியோ கேமராக்கள் மூலமாகவும்  பதிவு செய்யப்படுகிறது.  பாதுகாப்பு பணியில 2600 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  

 முத்துக் கவுண்டன் புதூரில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் போன்றவை முழுக்க முழுக்க  தாசில்தார், ஆர்.டீ.ஓ ஆகியோர் செய்கின்றனர். இதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த பங்கும் கிடையாது.  வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் வங்கி  பாஸ் புத்தகத்தை ஆதாரமாக கொடுக்கும் போது, அந்த வங்கியில் நடப்பு ஆண்டில் வரவு செலவு செய்து  வங்கிக் கணக்கு உயிருடன் இருந்தால் மட்டுமே அது செல்லக்கூடிய ஆவணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
 கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் டிசம்பர் 26ம் தேதி வரை 25 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை, 1800-5996000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் , மாவட்ட ஆட்சியர் தொலை பேசி எண் 94441 68000 என்ற எண்ணிலும், தேர்தல்களிலும் பிரிவு அலுவலர் முத்துக்கருப்பன்  செல்போன் எண் 94420 74189 என்ற எண்களிலும் தகவல்களை அளிக்கலாம்.   தேர்தல் தொடர்பாக நேற்றுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலைப் போன்றே இரண்டாவது கட்ட தேர்தலிலும் எந்தவித அசம்பாவிதங்களும்  இன்றி  அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும்.இவ்வாறு ராஜாமணி கூறினார்.

சூலூரில் 1806 புதிய வாக்காளர் சேர்ப்பு
சூலூர் தாலூகாவில் சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சிகளில்  புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் துணைப் பட்டியலில் மொத்தம் 1806 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக முத்துக் கவுண்டன் புதூர் ஊராட்சியில் 705 புதிய வாக்காளர்களும், பட்டணம் ஊராட்சியில் 170 புதிய வாக்காளர்களும், அரசூர் ஊராட்சியில் 147 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில்  மொத்தமுள்ள 20 ஊராட்சிகளில் மொத்தம் 70 புதிய வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது துணை வாக்காளர் பட்டியல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : polling stations ,district ,
× RELATED பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு