×

மாவட்டத்தில் பதற்றமான 170 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

ஈரோடு, டிச. 30: ஈரோடு மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியத்திலும் 6,920 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான 170 வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், பெருந்துறை, சென்னிமலை, பவானிசாகர், அம்மாபேட்டை 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், அம்மாபேட்டையில் 150 வாக்குச்சாவடி, அந்தியூரில் 134 வாக்குச்சவாடி, பவானி 133, பவானிசாகர் 112, சென்னிமலை 141, பெருந்துறை 129, சத்தியமங்கலம் 120 என 919 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு அலுவலர் உட்பட தலா ஏழு அல்லது எட்டு பணியாளர்கள் என 6,750 பேர் ஈடுபடுகின்றனர். இது தவிர, பதற்றமான வாக்குச்சாவடியாக கருதப்படும் 170 இடங்களில், 61 நுண் பார்வையாளர்கள், 49 வெப் கேமராவுடன் தலா ஒரு பணியாளரும், 80 இடங்களில் வீடியோகிராபர் மூலம் முழுமையான பதிவு என நடக்கிறது. தேர்தல் பணியில் மட்டும் 6,920 பேர் நேரடியாக ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையம் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குப்பெட்டிகளை அரசியல் கட்சியினர் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய வாக்குப்பெட்டிகள், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் முகாசிபிடாரியூரில் உள்ள குமாரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலம் ஒன்றியத்திற்கு, சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கு பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெருந்துறை ஒன்றியத்திற்கு பெருந்துறையில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பவானி ஒன்றியத்திற்கு பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு சிங்கம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் இன்று இரவு எடுத்து வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Districts ,District ,
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை