வாக்கு எண்ணும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமித்தது விதிமீறல்

திருப்பூர், டிச.30: திருப்பூர், மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு, அரசு விதிமுறைக்கு மாறாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர், மாவட்டத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (30ம் தேதி) நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 13 மையங்களில் வாக்கு எண்ணும் பணி வரும் ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக, ஒவ்வொரு மையத்திலும் வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இந்த பணிக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தன்னிச்சையாக நியமித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அரசியல் கட்சியினர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிடும் உள்ளூர் மட்ட வேட்பாளர்கள் கட்சி, சின்னம் அல்லாத சுயேட்சை சின்னத்தில் போட்டியிடக் கூடியவர்கள். இதனால் போட்டி நெருக்கமானதாகவும், பதற்றம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

அப்போது வாக்கு எண்ணும் பணியில் நன்கு பயிற்சி பெற்ற, அனுபவம் மிக்கவர்கள் ஈடுபடும்போது தான் பிழையின்றியும், முறைகேடு இல்லாமலும் வாக்கு எண்ணிக்கையை சரியாக நடத்த முடியும். ஏற்கனவே அனுபவம் உள்ள அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை நியமிக்காமல் தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பது சரியாக இருக்காது. மேலும், இத்தகைய செயல் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் என்றனர்.இது குறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு  உள்ளது. ஆகவே, அந்த வாக்குச்சீட்டுகளை பிரித்து வாக்கு எண்ணும் மேஜையில் போடுவதற்கு மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துகிறோம்.

தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில்தான், நாம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொடர்பான விவரங்களை, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினோம். அவர்கள் தான் தேர்தல் பணிக்கு தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்ப சொல்லி உள்ளனர். ஆகவே இதனை தேர்தல் விதிமீறல் என்று சொல்ல முடியாது என்றனர்.

Tags : Private School Teachers ,
× RELATED அரசு பொதுத்தேர்வில் முக்கிய பணிகளில்...