×

ஏரிமலை, கோட்டூர் மலைக்கிராமங்களுக்கு கழுதைகள் மீது ஏற்றிச்செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்

தர்மபுரி, டிச.30:  தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. கோட்டூர் மலை கிராமத்தில் 310 வாக்காளர்களும், ஏரிமலை கிராமத்தில் 300 வாக்காளர்களும் உள்ளனர். அருகிலுள்ள அலகட்டு மலை கிராமத்தில், 50 வாக்காளர்கள் உள்ளனர். அலகட்டு மலை கிராம மக்களுக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரிமலை மலைக்கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள மக்கள் ஏரிமலை கிராமத்துக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய இரண்டு மலைகிராமங்களுக்கும் சாலை வசதி இல்லை என்பதால், இங்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை, கழுதைகள் மீது ஏற்றி கட்டணம் செலுத்தித்தான் எடுத்து செல்லப்படுகிறது.

அதேபோல், மலை கிராமங்களில் விளையும் விவசாய பொருட்களும், கழுதையின் மீது ஏற்றப்பட்டு  மலையடிவாரத்துக்கு கொண்டு வருகின்றனர். இந்த கிராமங்களில் ஒவ்வொரு தேர்தலின்போதும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குப்பெட்டிகள் உள்ளிட்டவையும் கழுதைகள் மீது தான் எடுத்து செல்லப்படுகிறது. இன்று (30ம் தேதி) நடக்க இருக்கும் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு, நேற்று பிற்பகல் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கும், ஓட்டுபோடுவதற்கு தேவையான பொருட்களும் மலையடிவாரத்திற்கு மினிலாரியில் எடுத்துச்செல்லப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து கழுதைகள் மீது ஏற்றி வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான உபபொருட்கள் ஏரிமலை, கோட்டூர் மலைக்கு போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.

Tags : hill villages ,
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...