×

மூணாறில் தாவரவியல் பூங்கா திறப்பதில் சிக்கல்

மூணாறு,டிச.30: மூணாறில் ரூ.4.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு திறந்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.மூணாறில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் பொழுது போக்கும் வகையில் கேரளா சுற்றுலாத்துறை சார்பாக நவீன தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. மூணாறில் இருந்து தேவிகுளம் செல்லும் சாலையில் பழைய அரசு கல்லூரிக்கு அருகில் தேவிகுளம் எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.4.5 கோடி செலவில் 14 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பலதரப்பட்ட பூக்கள், தேனீர் கடைகள், திறந்தவெளி திரையரங்குகள், நவீன கழிப்பறைகள் மேலும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த பூங்காவை செப்.8ம் தேதி கேரள சுற்றுலாதுறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திறந்து வைத்தார். இந்நிலையில் பூங்காவில் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டது. இரு கட்சிகளின் பிடிவாதப்போக்கு காரணமாக தாவரவியல் பூங்காவின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்தை குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியானது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்றும், பூங்கா நிறுவப்பட்டுள்ள இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்றும், இந்த இடம் கார்ப்பரேட் முதலாளிகளின் வசம் இருப்பதாக இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர் டி.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக கேரள வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு கட்சி தலைவர்கள் தங்கள் பிடிவாத குணத்தை மாற்றி போராட்டங்களை கைவிட்டு தாவரவியல் பூங்கா திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Tags : Botanical Gardens ,Munnar ,
× RELATED பந்தலூர் பகுதியில் பலாக்காய் சீசன் களைக்கட்டுகிறது