×

செடிகள் வளர்ந்துள்ளன பலம் இழந்து வரும் பூவந்தி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமா?

திருப்புவனம், டிச.30:திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் வெண்டைக்காய், கத்தரிக்காய், புடலங்காய் உள்ளிட்ட ஏராளமான நாட்டு காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. திருப்புவனத்தையும் பூவந்தியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பழைய பாலம் சேதமடைந்ததால் புதிய பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் பொருட்களை மேலூர், பூவந்தி, திருப்புவனம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வது வழக்கம். இவர்களின் வசதிக்காக திருப்புவனத்தில் இருந்து பூவந்தி வழியாக மேலூருக்கு 25 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. சாலையின் குறுக்கே வைகை ஆற்றின் மேலே 621.8 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 1998ம் ஆண்டு உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு
பயன்பாட்டிற்கு வந்தது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பாலத்தின் பல இடங்களில் ஆலமரம், அரசமரம், வேம்பு மரம், புளியமரம் உள்ளிட்ட மர வகைகள் வளர்ந்துள்ளன. இவற்றின் வேர்கள் பாலத்தின் இடைவெளி வழியாக அடிப்பகுதி வரை சென்றுள்ளதால் பாலம் விரிவடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் கடும் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்று வரை சரி செய்யப்படவில்லை.

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலூர்- திருப்புவனம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. பாலத்தில் பராமரிப்பு பணிகளை அவர்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் பாலத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பாலத்தில் செடிகள் வளர்ந்ததுடன் மழை நீர் வடிகால்கள் அனைத்தும் மூடியுள்ளன. பாலத்தின் இருபுறமும் மணல் குவியல்கள் உள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே உடனடியாக பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

Tags : flowering bridge ,
× RELATED செடிகள் வளர்ந்துள்ளன பலம் இழந்து...