×

சிங்கம்புணரி வந்தது பெரியாறு கால்வாய் பாசன தண்ணீர் மகிழ்ச்சியில் விவசாயிகள்

சிங்கம்புணரி, டிச.30: சிங்கம்புணரி பகுதியில் பெரியாறு நீடிப்பு கால்வாயில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருவதால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிங்கம்புணரி ஒன்றியம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்டம் புலிபட்டியிலிருந்து சிங்கம்புணரிக்கு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் 1990ல் கட்டப்பட்டது. 1993ல் தண்ணீர் முதல்முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 800க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெற்றன.

கடந்த 22 ஆண்டுகளாக இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பராமரிப்பு இல்லாததால் கால்வாய் புதர்மண்டி சேதமடைந்தது. கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பில் சிங்கம்புணரி எல்லையிலிருந்து பிரிவு வாய்க்கால் 5 6 7 சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் இப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பல இடங்களில் கால்வாய் மண் மூடியும், மதகு சேதமடைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

பெரியாறு அணையில் 130 அடி நீர் தேக்கும் போது அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரை சிங்கம்புணரி கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. கடந்த ஆண்டு பெரியாறு அணை 130 அடியை எட்டிய போதும், சிங்கம்புணரி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் மண்மூடி இருந்ததால் தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் திறக்க சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர். கடந்த 16ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் மேற்கொண்ட முயற்சி காரணமாக பெரியாறு தண்ணீர் திறக்கப்பட்டு சிங்கம்புணரி வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Singhampunari Periyaru ,canal irrigation water farmers ,
× RELATED சிங்கம்புணரி வந்தது பெரியாறு...