×

உள்ளாட்சி தேர்தலுக்காக டாஸ்மாக் மூடல் பாரில் மது விற்பனை களைகட்டியது ‘குடிமகன்கள்’ குவிந்ததால் பரபரப்பு திருச்சி அண்ணா சிலை அருகே போக்குவரத்து பாதிப்பு

திருச்சி, டிச.30: திருச்சி அண்ணா சிலை அருகே சட்ட விரோதமாக பாரில் மது விற்கப்பட்டதால் குடிமகன்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் டிச.27ல் நடந்து முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று (30ம் தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை விடப்பட்டது. முதல் கட்ட தேர்தலின்போது விடுமுறை விடப்பட்டு, வழக்கம் போல் மாலை 5 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை விற்பனை நடைபெற்று அதன் பின்பு கடையை பூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்தபின் 31ம் தேதி மீண்டும் கடை திறக்கப்பட்டு அன்றைய தினம் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கையான 2ம் தேதி அன்றும் முன்னதாக 1ம் தேதியும் கடைக்கு விடுமுறை என அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாநகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. ஆனால், திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்டும் அங்கிருந்த பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதையறிந்த குடிமகன்கள் ஏராளமானோர் அந்த பாரை நோக்கி படையெடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிமகன்கள் போட்டி போட்டுக் கொண்டு மது வாங்க முண்டியடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் அங்கு சென்று கூட்டத்தை கலைத்து கட்டுப்படுத்தினர். மேலும் அப்பகுதி வழியாக வந்த பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் போகவும் வரவும் முடியாமல் வரிசை கட்டி நின்றன. இதனால் வாகனஓட்டிகள் திணறினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனாலும் விதிமுறை மீறி சட்டவிரோதமாக மது விற்ற பார் உரிமையாளர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருச்சி ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் வீடுகளில் மது பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, லட்சுமிநாராயணன், ஆனந்த் ஆகியோரை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Trichy Anna Statue ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி