×

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் குதூகலம் மேட்டூர், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மேட்டூர், டிச.30:  அரையாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி மேட்டூர், ஏறகாடு மற்றும் பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு வரும் 2ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேட்டூர் அணை பூங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் வந்து குவிந்தனர். மேட்டூர் அணை பூங்கா சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மேல் பூங்கா மற்றும் கீழ் பூங்கா என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் முதலைப் பண்ணை, பாம்பு பண்ணை, மீன் காட்சியகம், மான் பண்ணை உள்பட குழந்தைகளை மகிழ்விக்கும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. நேற்று சுற்றுலா வந்தவர்கள் பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு விளையாடிவாறு பொழுது போக்கினர். மொத்தம் 8 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர். இதன்மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ₹40 ஆயிரம் வரை வசூலானது.

இதேபோல், ஏற்காட்டிலும் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்திருந்தனர். அங்குள்ள ஏரியில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாய்ண்ட் மற்றும் சேர்வராயன் சுவாமி கோயிலை சுற்றிப்பார்த்தனர். சுற்றுலா பயணிகளால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் “குட்டி கேரளா” என்றழைக்கப்படும் சுற்றுலா தலமான பூலாம்பட்டியிலும் நேற்று மக்கள் குவிந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், அண்டை மாவட்டமான ஈரோட்டில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டிக்கு வந்திருந்தனர். அகண்ட காவிரியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், காலை முதல் மாலை வரை பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags : holiday ,Yercaud ,Yercaud Mettur ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!