×

செங்கரையில் புதிய காவல்நிலையம் நாமக்கல்லில் சைபர் கிரைம் பிரிவு விரைவில் துவக்கம்

நாமக்கல், டிச.30:செங்கரையில் புதிய காவல்நிலையமும், நாமக்கல்லில் சைபர் கிரைம் பிரிவும் விரைவில் துவங்கப்பட உள்ளதாக மாவட்ட எஸ்பி அருளரசு தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு நடந்த 206 குற்ற வழக்குகளில் 185 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டு போன சுமார் ₹1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. திருட்டு, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள், மதுவிலக்கு குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குற்றவாளி, மணல் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஆண்டு 24 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 2018-ம் ஆண்டு நடந்த 385 சாலை விபத்துகளில் 413 பேர் இறந்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது.

 325 சாலை விபத்துகளில் பதிவு 350 பேர்  இறந்துள்ளனர். வாகன விபத்தை குறைக்க, சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 4690 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2.22 லட்சம் மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யபட்டு அபராதத் தொகையாக ₹2.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 70,000 வழக்குகள் அதிகம். மாவட்டம் முழுவதும் 2483 இடங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கவும், 10 ஆயிரத்து 670 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாலியல் குற்ற வழக்குகளை பொறுத்தமட்டில் 2018-ம் ஆண்டில் 30 வழக்குகளும் 2019-ம் ஆண்டில் 46 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருட்டு போன 300 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

இணையதள வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 15 கல்லூரிகளை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 75 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இணையதள வழிக் குற்றங்களை கையாள புதிதாக நாமக்கல்லில் சைபர்கிரைம் பிரிவு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 25 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கொல்லிமலை  மக்களின் நலன் கருதி, வாழவந்திநாடு காவல் நிலையத்தை  பிரித்து, செங்கரையில் புதிய காவல் நிலையம் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தை விபத்தில்லாமலும், மற்றவர்களுக்கு ஆபத்து இல்லாத வகையிலும் இளைஞர்கள் கொண்டாடவேண்டும். 2020ம் ஆண்டு விபத்தில்லா வருடமாகவும், குற்றங்கள் இல்லாத வருடமாகவும், பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு கொண்ட ஆண்டாக மாற காவல் துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

Tags : police station ,Namakkal ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து