×

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் பெரிய விசைப்படகுகள் நிறுத்தாததால் மேடான படகு தளம்

கொள்ளிடம், டிச.30: கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டதால் பள்ளமான பகுதி மேடாகிப்போனது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே சிறந்த இரண்டாவது துறைமுகமாக இருந்து வரும் இந்த துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட விசைப்படகுகள், பெரிய 6 விசைப்படகுகளின் உரிமையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சிறிய ரக விசைப்படகுகள் மற்றும் பெரிய இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் மீன்பிடித்துறை அதிகாரிகளின் மூன்று கட்ட அமைதிப்பேச்சு வார்த்தைக்குப்பிறகு சிறிய ரக விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கடந்த டிசம்பர் 11 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டன.
ஆனால் பெரிய ரக அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கவில்லை. மேலும் துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும் பெரிய விசைப்படகுகள் நிறுத்த அனுமதிக்கவில்லை. இதனால், 131 பெரிய விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட இடம் வெறிச்சோடி காணப்படுகிறது. இவை அனைத்தும் துறைமுகம் அருகே உள்ள பக்கிம்காம் கால்வாயில் நிறுத்தப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் படகுகள் நிறுத்தப்படாததால் கடந்த 5 மாதங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த இடம் 200 மிட்டர் நீளத்திற்கும், 10 மீட்டர் அகலத்திற்கும், 6 மீட்டர் ஆழத்திற்கும் மீண்டும் மேடாகியுள்ளது. தொடர்ந்து நிறுத்தாமல் இருந்தால் மேலும் மணல் மேடாகி இதரப் படகுகளும் நிறுத்த முடியாத நிலை ஏற்படலாம். இது குறித்து பெரிய விசைப்படகு உரிமையாளர்கள் சார்பில் கோட்டையன் கூறுகையில், ரூ.80 லட்சம் முதல் 90 லட்சம் வரை விலை மதிப்பிலான பெரிய விசைப்படகுகள் எந்த பயனுமின்றி துறைமுகத்துக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மீன்பிடித்து வந்த எங்களை அனுமதிக்காததால் இதை நம்பியுள்ள 700 குடும்பங்கள் வருமானமின்றி அவதிப்படுகிறோம். எனவே அரசு மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக பெரிய விசைப்படகுகளை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

Tags : creek ,ferry boating site ,
× RELATED எண்ணெய் கசிவை அகற்றும் வகையில் பணிகளை...