திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்த கருவேல மரம்

திருவாடானை, டிச.30: சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

திருவாடானையில் இருந்து மங்கலக்குடி சாலை சாலையில் இருந்து கீழக்கோட்டை, நாகனி ஆகிய கிராமங்களுக்கு பிரிவு சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்து கிடக்கிறது. இதனால் கார் போன்ற வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை முள்கள் குத்திக் காயப்படுத்தி விடுகிறது. இந்த செடிகளை அகற்ற பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் அகற்றவில்லை என இரண்டு கிராம பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கீழக்கோட்டை கிராம பொதுமக்கள் கூறுகையில், இந்த முள்செடிகள் வாகனத்தில் செல்பவர்களை காயப்படுத்தி விடுகிறது. இதனை அகற்ற பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை கண்டு கொள்ளவில்லை. எனவே விரைவில் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் இருந்து பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் ரோட்டில் வந்து படர்ந்து உள்ளது. இதனால் ஒரு வாகனம் வந்தால் மற்றொரு வாகனம் சொல்லுவதற்கு வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளையும், டூவீலர்களில் செல்லும் வாகன ஒட்டிகளையும் கருவேல மரத்தின் முட்கள் குத்தி பதம் பார்த்து விடுகிறது.

இந்த நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரிடம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆனந்தூரில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் மட்டுமே நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கருவேல மரங்களை அப்புறப்படுத்தினார்கள். மீதி தூரத்தை அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் இந்த சாலையில் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொதுமக்கள் சார்பாக சாலையின் இருபுறம் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: