×

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு

சாயல்குடி, டிச. 30:  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி ஓட்டை, உடைசலுடன் இருப்பதால் வாக்காளர்கள், அலுவலர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அடிப்படை வசதியில்லாத மையங்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நயினார்கோயில், பரமக்குடி, போகலூர், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய  ஒன்றியங்களில் இன்று நடக்கிறது. இதில்  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலாடி ஒன்றியத்தில் 260 வாக்குச்சாவடி மையங்கள், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 179 வாக்குச்சாவடி மையங்கள், கமுதி ஒன்றியத்தில் 206 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட 645 மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி சமுதாய கூடங்கள் வாக்குசாவடி மையங்களாக உள்ளன.

ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகள், ஊராட்சி சமுதாய கூடம் கட்டிடங்கள் தரமற்று உள்ளது. கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்தும், ஓடுகள் உடைந்தும், கட்டிடங்கள் சேதமடைந்தும் கிடக்கிறது. மின்சார வசதியில்லாததால் மின்விளக்குகள் எரியாமலும், மின்விசிறிகள் இல்லாமலும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு எளிதாக வந்து செல்ல அமைக்கப்பட்ட சாய்தள பாதை கட்டுமானங்களும் உடைந்து கிடைக்கிறது.

பெரும்பாலான வாக்குச்சாவடி அமைந்துள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் வசதி உள்ளது. கழிவறைக்கு தண்ணீர் வசதி கிடையாது. இதனால் கழிவறை வசதியும் கிடையாது. இதனால் தேர்தல் நடத்த வரும் அலுவலர்கள் குறிப்பாக பெண் அலுவலர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் அவலநிலை உள்ளது என தினகரனில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து அடிப்படை வசதியில்லாத வாக்குசாவடி மையங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அடிப்படை வசதியில்லாத மையங்களில் தரைத்தளம் சீரமைப்பு, சாய்தள பாதை கட்டுமானம் அமைக்கும் பணி, தற்காலிக குளிக்கும் வசதி, கழிப்பறை வசதிகள், மின்சார வசதி, கூடுதல் மின் விளக்கு, மின் விசிறி அமைக்கும் பணிகள் போர்கால அடிப்படையில் நடந்தது. இதனால் நேற்று வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட தளவாட பொருட்களுடன் வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : facilities ,polling centers ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...