×

வேப்பனஹள்ளி அருகே மலைகிராமத்திற்கு வாக்குப் பெட்டிகளை சுமந்து சென்ற அலுவலர்கள்

கிருஷ்ணகிரி, டிச.30: வேப்பனஹள்ளி அருகே ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 4.6 கி.மீ தூரத்திற்கு வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஒன்றியத்திற்குட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சியில், ஏக்கல்நத்தம் மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு பெரியசக்கனாவூர் என்ற இடத்தில் இருந்து சாலை வசதி இல்லாததால் 4.6 கி.மீ தூரம் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும், இங்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்குப்பெட்டிகளை அலுவலர்கள் சுமந்தபடி எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால், இந்த வாக்குச்சாவடிக்கு வாக்குப்பெட்டிகள், தேர்தல் பொருட்களை நேற்று வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வாகனம் மூலம் பெரியசக்னாவூர் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு மண்டல அலுவலர் சரவணன் தலைமையில் 3 பெண் அலுவலர்கள் மற்றும் எஸ்எஸ்ஐக்கள் கோபாலசாமி, ரஹீம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் மலை கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது, வாக்குப்பெட்டிகள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சுமந்தபடி கரடுமுரடான சாலையில் சிரமத்துடன் அலுவலர்கள் எடுத்து சென்றனர். ஏக்கல்நத்தம் கிராமத்தில் 262 ஆண் வாக்காளர்கள், 225 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 487 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பலர் வெளியூரில் பணியில் உள்ளதால், நேற்று வாக்களிப்பதற்காக தங்களது கிராமத்திற்கு வந்தனர்.  இதுகுறித்து மலை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், ‘சாலை வசதி கேட்டு கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல், 2016ல் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019ம் நடந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தோம்.

தற்போது 4.6 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது. இதற்காக சாலை அமைக்க 2018-19ம் ஆண்டிற்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தமிழக அரசு ₹2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததால், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வாக்களிக்க உள்ளோம். நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எங்கள் கிராமத்தில் வார்டு எண்-1 அமைந்துள்ளதால், நாங்கள் வாக்களிக்க உள்ளோம்,’ என்றனர்.

Tags : Veppanahalli ,hill village ,
× RELATED நித்திரவிளை அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மின் கம்பத்துக்கு ஊன்று கோல்