×

மதுரை அரசு விரிவாக்க மருத்துவமனையில் பழுதுபார்த்து பயன்படுத்தாமல் தூக்கி வீசப்பட்ட கட்டில்கள் துருப்பிடித்து வீணாகும் அவலம்

மதுரை, டிச. 30: மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில், சிறிய பழுது ஏற்பட்ட கட்டில்களை சரிசெய்யாமல், மூலையில் போட்டு வைத்திருப்பதால், அனைத்தும் துருப்பிடித்து வீணாகிக்கொண்டிருக்கிறது. மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்கு விபத்துகளில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தலைக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அபாய கட்டத்தை தாண்டியபின், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய சிகிச்சைப்பிரிவு வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்.

இந்த வார்டுகளில், பயன்பாட்டில் உள்ள கட்டில்களில் ஏற்பட்டுள்ள சிறு, சிறு பழுதுகளை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், தூக்கி மூலையில் போட்டு விட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, ``இந்த கட்டில்கள் அனைத்தும் சின்னச் சின்ன பழுதுகளால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. கட்டில்கள் மட்டுமல்லாமல், வீல் சேர்கள், ஸ்ட்ரெச்சர்கள், குளுக்கோஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட தளவாட சாமான்களை சரிசெய்ய, பழைய பிரசவ வார்டுக்கு அருகே, அரசு பணிமனை உள்ளது. இந்த கட்டில்களை அங்கு தூக்கிச்சென்று கொடுத்து விட்டால், ஓரிரு நாட்களில் சரி செய்து கொடுத்து விடுவார்கள். ஆனால், இந்த கட்டில்களை தூக்கிச்சென்று சரிசெய்ய, ஆர்வமுள்ள ஆட்கள் இல்லாததால், அனைத்தையும், தூக்கி மூலையில் போட்டு விட்டனர்.
இன்னும் சில தினங்களில் அனைத்தும் துருப்பிடித்து வீணாகி விடும். இதனால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. உடனே இந்த கட்டில்களை சரிசெய்து, தரையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு வழங்கலாம்’’ என்றார்.

Tags : Madurai Government Extension Hospital ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...